இலுப்பை மரங்கள் சூழ்ந்து இருந்ததால் 'இலுப்பைப்பட்டு' என்று அழைக்கப்படுகிறது. பஞ்ச பாண்டவர்கள் இக்கோயிலில் உள்ள ஐந்து லிங்கங்களை வழிபட்டனர். அமிர்தகரவல்லி உடனாய நீலகண்டரை தருமரும், மங்கலநாயகி உடனுறை படிக்கரை நாதரை அர்ஜுனனும், மகதீசரை பீமனும், பரமேசரை நகுலனும், முத்தீசரை சகாதேவனும் வழிபட்டதாகவும், இங்கு உள்ள வலம்புரி விநாயகரை திரௌபதி வணங்கியதாகவும் தல புராணம் கூறுகிறது. நடன விநாயகர் என்னும் மற்றொரு விநாயகர் சன்னதியும் உண்டு.
தேவர்கள் பாற்கடலை கடைந்தபோது ஆலகால விஷம் தோன்றியது. சிவபெருமான் அந்த விஷத்தை உண்டபோது, பார்வதி தேவி அவரது கண்டத்தைப் பிடித்தார். அதனால் கழுத்தில் தங்கிய விஷத்தை ஈசன், அம்பிகைக்குக் காட்டிய தலம். அதனால் சிவபெருமானுக்கு 'நீலகண்டர்' என்னும் திருநாமம் ஏற்பட்டது.
மூலவர் 'நீலகண்டர்' என்னும் திருநாமத்துடன், லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பிகை 'அமிர்தகரவல்லி' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
திருமால், பிரம்மதேவன், இந்திரன் மற்றும் நளன் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டனர்.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
சுந்தரர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|